வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை

வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை; இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை உலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டு - பில் கேட்ஸ் புகழாரம்

by Bella Dalima 18-04-2018 | 9:20 PM
Colombo (News 1st)  லண்டனில் இன்று நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை முன்னிட்டு இன்று பல மாநாடுகள் இடம்பெற்றன. இதில் வர்த்தக மாநாடு முக்கியமானது. உலக பொருளாதாரத்திற்குள் பிரவேசிப்பதற்கு சிறிய நாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் சிறிய நாடுகளின் வர்த்தக நிதி வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலான நிதியம் ஒன்றை அமைப்பது குறித்து, லண்டனில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை முன்னிட்டு நடைபெறும் கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, வலயத்தில் உள்ள சிறிய இராச்சியங்கள் சர்வதேச சந்தையில் பிரவேசிக்கும் வாய்ப்பினை விஸ்தரிப்பதற்காக இந்த புதிய நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை, இந்தியா, மோல்டா மற்றும் மொரிஷஸ் என்பன மூலதன செலவாக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலரை பயன்படுத்துவதற்கு நேற்று லண்டனில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதில் கையொப்பமிட்டதுடன், இலங்கை குறித்த நிதியத்திற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை உலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேல்ட்ஸ் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸ் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் பிரித்தானியாவின் பிரதமர் தெரசா மே மற்றும் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

ஏனைய செய்திகள்