CIA தலைவர் கிம்முடன் இரகசிய சந்திப்பு?

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் வட கொரிய அதிபர் கிம்முடன் இரகசிய சந்திப்பு?

by Bella Dalima 18-04-2018 | 4:03 PM
அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பாப்பியோ, வட கொரிய அதிபர் கிம்மை இரகசியமாக சந்திந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்மாத தொடக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் அசோசியேட் பிரஸ் போன்றவை செய்தி வௌியிட்டுள்ளன. இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இது தொடர்பில் பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேயுடனான சந்திப்பின்போது, ''நாங்கள் வட கொரியாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக நிறைய நல்ல விடயங்கள் நடக்கும் என்று நம்புகிறோம்,'' என ட்ரம்ப் கூறியுள்ளார். வட கொரியாவின் அணு ஆயுத சோதனை காரணமாக அமெரிக்கா- வட கொரியா இடையே மோதல் போக்கு நிலவியது. வட கொரியாவின் மீது அமெரிக்கா ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்தது. எனினும், இதனை சற்றும் பொருட்படுத்தாத வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதன் காரணமாக வட கொரியாவை அச்சுறுத்தும் நோக்கில், தென் கொரியாவுடன் இணைந்து கொரிய எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.