அமெரிக்கா வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை

அமெரிக்கா வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது - டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 18-04-2018 | 8:09 AM
COLOMBO (News 1st) அமெரிக்கா வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடனான வரலாற்று மாநாடு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்மட்ட விடயங்கள் தொடர்பில் வடகொரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும், கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பிற்காக 5 இடங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமர் ஹின்சோ அபேயுடனான சந்திப்பின்போது ட்ரம்ப் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். வடகொரிய தலைவரை சந்திக்கும் அமெரிக்காவின் தைரியத்தன்மை குறித்து அபே பாராட்டு தெரிவித்துள்ளார். வடகொரியாவுடனான நேரடி பேச்சுவார்த்தையை ஏற்று டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதத்தில் சர்வதேச சமூகத்துக்கு அதிர்ச்சியளித்திருந்தார். வடகொரிய தலைவரை அமெரிக்க ஜனாதிபதியொருவர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பமாகவும் இது அமையவுள்ளது. இந்த சந்திப்பு ஜூன் மாதத்தில் முற்பகுதி அல்லது அதற்கு முன்னர் இடம்பெறும் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தென்கொரியா மற்றும் வடகொரியாவுக்கிடையிலான இராணுவ மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வௌியிட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.