Colombo (News 1st)
வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேச சபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபை ஆகியன தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது.
வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேச சபையின் தலைவர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ச.தணிகாசலமும் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த ஜெ.ஜெயரூபனும் போட்டியிட்டனர்.
இருவரும் 11 வாக்குளை பெற்ற நிலையில், திருவுளச்சீட்டின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த ச.தணிகாசலம் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
சபையின் உப தலைவராக நா.யோகராஜா தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா தெற்கு பிரதேச சபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது.
சபையின் தலைவர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் து.நடராஜசிங்கமும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தம்பாப்பிள்ளை சிவராசாவும் போட்டியிட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட து.நடராஜசிங்கம் 14 வாக்குகளைப் பெற்று வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கே.மகேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.
இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா நகரசபையும் செட்டிக்குளம் பிரதேச சபையும் நேற்று (16) மாற்றுக்கட்சி வசமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம் இருந்த வவுனியா நகர சபையை இம்முறை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தலைவராக நேற்று தெரிவு செய்யப்பட்டார்
வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை, செட்டிக்குளம் பிரதேச சபையின் தலைவராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி தெரிவு செய்யப்பட்டார்.