பொஸ்டன் மரதனோட்டம்:  ஜப்பானியர் சாம்பியன்

பொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்

by Bella Dalima 17-04-2018 | 5:02 PM
வரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் பொஸ்டன் மரதனோட்டத்தில் சாம்பியனான முதல் ஜப்பானிய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். 112 வருட வரலாற்றைக்கொண்ட பொஸ்டன் மரதனோட்டம் அமெரிக்காவின் பொஸ்டன் நகரை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. மரதனோட்டத்தில் வருடாந்தம் சம்பிரதாயப்பூர்வமாக பல நாட்டு நட்சத்திர வீர, வீராங்கனைகள் கலந்துகொள்வது வழமை. அந்த வகையில், இவ்வருட பொஸ்டன் மரதனோட்டம் நேற்று (16) நடைபெற்றது. Yuki Kawauchi இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் பந்தய தூரத்தைப் பூர்த்தி செய்து, ஆடவர் பிரிவில் சாம்பியனானார். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் Desiree Linden சாம்பியனாக மகுடம் சூடினார். வெற்றிக்காக அவர் 02 மணித்தியாலங்கள் 39 நிமிடங்களை எடுத்துக்கொண்டார் அமெரிக்க வீராங்கனையொருவர் 33 ஆண்டுகளுக்கு பின்னர் பொஸ்டன் மரதனோட்டத்தில் வெற்றி பெற்றமை விசேடமானதாக அமைந்தது. இதற்கு முன்னர் பொஸ்டன் மரதனோட்டத்தில் அமெரிக்க வீராங்கனையொருவர் 1985 ஆம் ஆண்டு சாம்பியனாகியிருக்கின்றார்.