பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்திருந்தனர்

பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஐ.ம.சு.கூ. ஏகமனதாக தீர்மானித்திருந்தது: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

by Bella Dalima 17-04-2018 | 9:26 PM
Colombo (News 1st)  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்திருந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கட்சியின் இந்த தீர்மானத்திற்கு அமையவே தாம் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையின் போது கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டவர்களுக்கு தற்போது மேலதிக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயை மேற்கோள் காட்டி 'தி ஐலன்ட்' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்த போது பிரதமர் பதவி விலக வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 4 ஆம் திகதி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில், கட்சியின் உப தவிசாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கூடிய பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு சீர்குலைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்ததாக 'தி ஐலன்ட்' பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.