இலங்கையின் குளத்தை மையமாகக்கொண்ட நீர்ப்பாசனத்திட்டம் உலக விவசாய மரபுரிமையாக பிரகடனம்
by Bella Dalima 17-04-2018 | 6:15 PM
Colombo (News 1st)
இலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட்டம் உலக விவசாய மரபுரிமையாக பிரகடனம் செய்யப்படவுள்ளது.
இந்த மாதம் 19 ஆம் திகதி ரோம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்வின் போது இதற்கான அறிவித்தல் விடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகின்ற ஆற்றுப்படுகையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் உலக மரபுரிமையாக அதனை அங்கீகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் எதிர்வரும் 19 ஆம் திகதி இதற்கான சர்வதேச விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இலங்கையைத் தவிர சீனா, எகிப்து, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
பாரம்பரிய விவசாய மரபுரிமைகளைப் பாதுகாத்து, அதன் பெறுமதியை உணர்த்தும் வகையிலும் உயிர் பல்வகைமையை பாதுகாக்கும் நோக்கிலும் ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.