by Bella Dalima 17-04-2018 | 5:20 PM
Colombo (News 1st)
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட நிக் பொத்தாஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.
தென்னாபிரிக்காவின் முன்னணி விக்கெட் காப்பாளராக செயற்பட்ட நிக் பொத்தாஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிரஹம் போர்ட் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நிக் பொத்தாஸ் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹதுருசிங்க நியமிக்கப்பட்ட நிலையில், மீண்டும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நிக் பொத்தாஸ் செயற்பட்டார்.
நிக் பொத்தாஸின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகின்ற நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்த முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நிக் பொத்தாஸ் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.