மாகாண சபைத் தேர்தல் புதிய முறையில் இடம்பெறுமா?

அடுத்த மாகாண சபைத் தேர்தல் புதிய முறையில் இடம்பெறுமா? அரசின் ஏற்பாடுகள் என்ன?

by Bella Dalima 17-04-2018 | 8:07 PM
Colombo (News 1st)  பழைய முறைப்படியே அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டும் என பல கட்சிகள் தெரிவித்து வருகின்றன. மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. சப்ரகமுவ மாகாண சபை, வட மத்திய மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றின் அதிகாரம் நிறைவடைந்து, அவை தற்போது ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த வருடம் மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்தது. வடமேல், மத்திய மற்றும் வட மாகாண சபை என்பவற்றின் பதவிக்காலம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார். அவ்வாறாயின், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடுகள் என்ன? மாகாண சபைகள் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பான யோசனைகள் அடங்கிய சட்டமூலம் கடந்த வருடம் செப்டம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, மாகாண சபை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினால், அங்கு நடைபெறும் விவாதத்தின் பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்தின் படியே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மேலும் தெரிவித்தார். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவ்வாறு சட்டத்தை தயாரித்து வழங்கினால் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. எனினும், பழைய தேர்தல் முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் தெரிவித்து வருகின்றன. பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உள்ளிட்ட மாகாண சபைகள் திருத்த சட்டமூலம் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. திருத்தங்களுடன் கூடிய சட்டமூலத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிறுபான்மைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.