இரசாயனதாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்

இரசாயன தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் - அரபு லீக் நாடுகள்

by Staff Writer 16-04-2018 | 7:57 PM
'காற்றுக்கு பதிலாக நாங்கள் இரத்த வாடையை சுவாசிக்கிறோம்' என சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் சிக்கி உயிர்பிழைத்த 7 வயதுடைய மாசா எனும் சிறுமி, தான் அனுபவித்த துன்பத்தை பகிர்ந்து கொண்டார். பீப்பாயொன்று கொண்டுவந்து நிறுத்தப்பட்ட போது, தானும் தமது குடும்பமும் எவ்வாறு மறைந்திருந்தோம் என்பது தொடர்பில் அவர் நேற்று தெரிவித்திருந்தார். மிகக்கொடூரமான அனுபவத்தை தாண்டி வந்த பின்னரும் அந்த சிறுமியின் முகத்தில் சிரிப்பை காண முடிந்தது. கடந்த சனிக்கிழமை அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து 105 எறிகணைகளை கொண்டு சிரியாவில் வான் தாக்குதல் மேற்கொண்டது. சிரியாவின் டவுமா பகுதியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எனினும் இரசாயனத் தாக்குதல் நடத்தப்படவில்லையெனவும், மேற்குலக நாடுகளின் வான்தாக்குதலை ஆக்கிரோஷ நடவடிக்கையாகவே கருதுவதாகவும் சிரியா தெரிவித்துள்ளது. சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரபு லீக் நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் சிரியாவின் உள்விவகாரங்களில் ஈரான் தலையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க படைகளை சிரியாவில் நிலைநிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவேல் மெக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் சமாதானத்தை நிலைநாட்ட புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி 7 வருடங்கள் கடந்துள்ளதுடன், இதுவரை 511,000 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 5 மில்லியன் மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் 6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.