by Staff Writer 16-04-2018 | 3:37 PM
COLOMBO (News 1st) வவுனியா நகரசபையை இம்முறை தமிழர் விடுதலை கூட்டணி கைப்பற்றியுள்ளது.
நகரசபையின் தலைவராக இ.கௌதமன் தெரிவு செய்யப்பட்டதுடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சு.குமாரசுவாமி உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில் இ.கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுண, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இதேவேளை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாசவுக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியூதினுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மூவர் தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பிலேயே முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
இதேவேளை தமிழர் விடுதலை கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலருக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.