மலர்ந்தது விளம்பி வருடம் 

மலர்ந்தது விளம்பி வருடம் 

by Bella Dalima 14-04-2018 | 3:57 PM
Colombo (News 1st)  விளம்பி தமிழ் வருடம் இன்று காலை மலர்ந்தது. சூரிய பகவான் பன்னிரு ராசிகளில் முதலாவது ராசியான மேட ராசிக்குள் பிரவேசிக்கும் தினத்தை தமிழர்கள் வருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். விளம்பி என்ற திரு நாமத்துடன் மலர்ந்த புதுவருடம் 60 தமிழ் வருட சுற்றுவட்டத்தில் 32 ஆவது வருடமாகும். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி இன்று காலை 7 மணிக்கு விளம்பி வருடம் பிறந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். காலவோட்டத்தின் வேகத்தில் களைத்துப்போயுள்ள மனிதனுக்கு, பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் புத்துயிரளிக்கின்றன. பண்பாட்டினதும் வரலாற்றினதும் உன்னதங்களை பண்டிகைகள், புதிய தலைமுறையினரிடையே கொண்டு செல்கின்றன. இந்துக்களின் பண்பாட்டில் முக்கிய கொண்டாட்டங்களின் ஒன்றான புத்தாண்டு இலங்கையில் மாத்திரமின்றி தமிழர்கள் பரந்து வாழும் உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், பீடித்துள்ள தோசங்களை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களைத் தேடும் புண்ணிய காலத்தில் தோசங்கள் நீங்கப்பெற மருத்து நீர் ஆடப்படுகிறது. புத்தாடை அணிந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குதலும் மரபாக இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. ஆண்டின் வருங்காலப் பலன்களை அறிந்துகொள்ள பஞ்சாங்கம் பார்க்கின்ற நிகழ்வும் புத்தாண்டின்போது முன்னெடுக்கப்படுகிறது. ஆண்டு முழுதுவதும் செல்வம் கொழிக்க வேண்டும் என்பதற்காக கை விசேடம் பெறுதல் எனப்படும் பண கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறுகின்றன. நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து அறுசுவை உணவினை உண்டு வாழ்த்துக்களையும் இந்நாளில் பரிமாறுகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு கலை, கலாசார அம்சங்களிலும் எமது முன்னோடிகள் ஈடுபட்டுள்ளனர். போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு, ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ரப்பன் அடித்தல், சொக்கட்டான், மாட்டு வண்டிச்சவாரி போன்ற சுதேச விளையாட்டுக்களும் இடம்பெறுவதுண்டு. காலை வேளை மத அனுஷ்டானங்கள் இடம்பெறுவதுடன் மாலை வேளையில் விளையாட்டுக்களும் நண்பர்கள், உறவினர்களுடன் உறவாடுதலும் நமது முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்தவையாகும். நவீன உலகின் வளர்ச்சியினால் புதுவருட பாரம்பரிய விளையாட்டுக்கள் அருகி வருகின்ற போதிலும், கிராமப்புறங்களில் இன்னமும் வழக்கொழியாது இடம்பெற்று வருகின்றன. சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், பெண் பிள்ளைகள் என பலரும் மகிழ்வுடன் விளையாடிய தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் பல இன்று மறைந்துவிட்டன. உடலுறுதிக்கும் அறிவுத்திறனுக்கும் மகிழ்விற்குமாகப் பயின்று வந்த பாரம்பரிய விளையாட்டுகள் பல இன்று வழக்கொளிந்த நிலையிலுள்ளன. பண்டையகாலத்து பாரம்பரிய விளையாட்டுகளை இன்று வீடுகளிலோ, வீதிகளிலோ விளையாட்டுத் திடல்களிலோ காணமுடியாதுள்ளது. சமூக, பொருளாதார, கல்வி, பண்பாட்டு மாற்றங்கள் காரணமாக இவ்விளையாட்டுக்கள் கைவிடப்பட்டு மறைந்து போயுள்ளன. எவ்வாறாயினும், பெண் பிள்ளைகள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டாகிய ஊஞ்சலாடுதல் விளையாட்டு மட்டக்களப்பு - அம்பலாந்துறையில் இன்று இடம்பெற்றது. இளைஞர்களுக்கான பாரம்பரிய விளையாட்டாகிய மாட்டு வண்டிச்சவாரி முல்லைத்தீவு - நந்திக்கடல் திடலில் இன்று நடைபெற்றது.   பிறந்திருக்கும் புது வருடம் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாய் அமைய, நியூஸ் பெஸ்டின் நல்வாழ்த்துக்கள்!