by Bella Dalima 14-04-2018 | 6:37 PM
Colombo (News 1st)
புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை அதிகளவில் இலாபம் ஈட்டியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை நாளொன்றுக்கு 78 மில்லியன் ரூபா வீதம் இலாபம் ஈட்டியுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களின் நலன்கருதி நாளைய தினமும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அனைத்து நகரங்களுக்கும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.பி. ஹேமச்சந்திர தெரிவித்தார்.
பிரதேச மட்டத்திலும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளைய தினம் (15) விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கி நாளை காலை 7.30 மணிக்கு விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
மாத்தறையில் இருந்து மருதானை வரை நாளை இரவு 7 மணிக்கு ரயிலொன்று பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், மருதானையில் இருந்து மாத்தறை வரை நாளை மாலை 2.55 க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை நாளை இரவு 8 மணிக்கு மற்றுமொரு ரயில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
அத்துடன், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியிலும் விசேட பஸ் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.