புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்பாடு 

சுதந்திரக் கட்சி, ஐ.தே.க இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன

by Bella Dalima 14-04-2018 | 7:55 PM
Colombo (News 1st)  புத்தாண்டு மலர்வதற்கு ஒரு சில மணித்தியாலத்திற்கு முன்னர் அதாவது நேற்று இரவு தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சர் சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆராய்வது இதன் நோக்கம் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் கவனம் செலுத்தும் பொறுப்பும் சரத் அமுனுகமவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவிடம் வினவியபோது, இது தொடர்பிலான ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைகளையும் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் லண்டன் விஜயம் நிறைவடைந்த பின்னர் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள பின்புலத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதேவேளை, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு கிடைக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்குமான உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் என கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.