அஞ்சலோட்டத்தில் இலங்கை புதிய போட்டி சாதனை

ஆடவருக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புதிய போட்டி சாதனை

by Bella Dalima 14-04-2018 | 8:33 PM
பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புதிய போட்டி சாதனை படைத்தது. பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி இன்று காலை நடைபெற்றது. 39.08 செக்கன்ட்களில் போட்டியை பூர்த்தி செய்த இலங்கை குழாம், புதிய போட்டி சாதனையுடன் 6 ஆம் இடத்தைப் பெற்றது. ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய, மொஹமட் அஷ்ரபி, ஹேஷான் அபேபிட்டிய ஆகியோர் போட்டியில் இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர். 38.13 செக்கன்ட்களில் போட்டியைப் பூர்த்தி செய்த இங்கிலாந்து குழாம் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. தென்னாபிரிக்க குழாம் வௌ்ளிப்பதக்கத்தையும் ஜமைக்கா குழாம் வெண்கலப்பதக்கத்தையும் வென்றன. ஆடவருக்கான பட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இலங்கையின் சச்சின் டயஸ் மற்றும் புவனேக குணதிலக்க ஜோடி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியடைந்தது. போட்டியில் மலேஷிய ஜோடி வெண்கலப்பதக்கத்தை வென்றது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடியுடன் விளையாடிய இலங்கை குழாம் தோல்வியடைந்ததை அடுத்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சம்பத் ரணசிங்க போட்டியிட்டார். அவர் 70 .15 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்ததோடு போட்டியில் 12 ஆம் இடத்தைப் பிடித்தார். 86.47 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்த இந்தியாவின் நீராஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் படி 01 வெள்ளி , 05 வெண்கலம் உள்ளடங்கலாக 6 பதக்கங்களை வென்றுள்ள இலங்கை பதக்கப்பட்டியலில் 31 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Gold Coast இல் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழா நாளை (15) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.