யாழ்ப்பாணத்தில் 683 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு

by Bella Dalima 13-04-2018 | 3:56 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 683 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி வடக்கு, தையிட்டி கிழக்கு, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் காணப்பட்ட காணிகளே இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவால் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இந்த காணிகள் இன்று உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு மயிலிட்டி பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். யாழ். மாவட்டத்தில் உள்ள 12 நலன்புரி முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட சுமார் 300 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.