நவாஸ் ஷெரீஃப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

by Bella Dalima 13-04-2018 | 4:53 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமனறம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும் ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் இரகசிய முதலீடுகள் செய்த பணம், முறைகேடாகப் பெறப்பட்டதா என்பதை விசாரிக்கும்படி பாகிஸ்தான் ஊழல் தடுப்பு, நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, அந்த நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் லண்டனில் வாங்கிய சொத்துக்கள் பற்றிய புதிய துணை வழக்கை பனாமா ஆவண ஊழல் வழக்குடன் இணைத்து விசாரிக்க ஆட்சேபனை தெரிவித்து, மேன்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி முகமது பஷீர், அந்த ஆட்சேபனையை நிராகரித்தார் இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான பனாமா ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.