மருமகனின் தீக்குளிப்பிற்கு சீமான்கட்சியினரே காரணம்

தனது மருமகனின் தீக்குளிப்பிற்கு சீமான் கட்சியினரே காரணம் என வைகோ குற்றச்சாட்டு

by Bella Dalima 13-04-2018 | 6:53 PM
தனது மருமகனான சரவணன் சுரேஷ் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றமைக்கு சீமானின் நாம் தமிழர் கட்சியினர் வௌியிடும் மீம்ஸ்களே காரணம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகனான சரவணன் சுரேஷ் என்பவர் இன்று காலை விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த நிலையில், அவரை மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். இதன்போது, வைகோ கூறியதாவது,
30 ஆம் திகதி மாலையில் என்னைச் சந்தித்தவர், மிகவும் வருத்தப்பட்டு அழுதார். என்னவென்று கேட்டேன். பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டார். சீமான் ஆறுமுகம் என்பவர், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் என் மகன் வையாபுரிக்கு 3 சதவீதம் பங்கு வாங்கிவிட்டதாகக் குறிப்பிட்டு, ''ஸ்டெர்லைட் டீல் முடித்து தற்போது நியூட்ரினோ டீலுக்கு புறப்பட்டுவிட்டான்'' என்று போட்டிருக்காங்கன்னு சொன்னார். சீமான் கட்சியைச் சேர்ந்த இன்னொருவரும் இதேபோல எழுதியிருக்கிறார். நீங்க 32 வருடமாக ஸ்டெர்லைட்டிற்காகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் முதலாளியையே பார்க்க மறுத்தீர்கள். இப்போது ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் நடக்கும்போது அங்கு உங்களால் போக முடியவில்லை. எதற்கு உங்களை தொடர்ந்து கேவலமாக சித்தரித்து, ஜாதியைக் குறிப்பிட்டு பதிவிடுகிறார்கள் என்று கேட்டார்
என செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார். தன் வாழ்க்கை முழுவதும் பழியைச் சுமந்து வந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தால் தன் குடும்பத்தினர் நொறுங்கிப் போயிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.