நேற்றைய அறிக்கைக்கு ஜனநாயக இளைஞர் இணையம் கண்டனம்

ஜனநாயக மக்கள் முன்னணியில் விரிசல்: நேற்று விடுக்கப்பட்ட அறிக்கைக்கு கண்டனம்

by Bella Dalima 13-04-2018 | 9:05 PM
Colombo (News 1st)  ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து ஜனநாயக இளைஞர் இணையத்தின் உறுப்பினர்கள் விலகியமை பொய்யானது என்று இணையத்தின் செயலாளரினால் விடுக்கப்படும் அறிக்கை என நேற்று விடுக்கப்பட்ட அறிக்கைக்கு கண்டனம் வௌியிடப்பட்டுள்ளது. ஜனநாயக இளைஞர் இணையத்தினால் இந்த கண்டன அறிக்கை இன்று வௌியிடப்பட்டுள்ளது. இணையத்தின் செயற்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் செயலாளரைக் கொண்டு ஜனநாயக மக்கள் முன்னணி குறித்த மறுப்பறிக்கையை நேற்று வௌியிட்டதாக இளைஞர் இணையத்தின் பிரதித் தலைவர் ஜெயப்பிரகாசம் நிரோஷ்காந்த் அறிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் இணையம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், அதன் ஸ்தாபக அமைப்புச் செயலாளராகிய ஆனந்ததாஸ் சஜீவானந்தன் தலைவராகவும், ஸ்தாபக செயலாளர் ஜெயப்பிரகாசம் நிரோஷ்காந்த் பிரதித் தலைவராகவும் செயற்பட்டதாக இணையத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இளைஞர் இணையத்தின் பெயரில் வௌிவரும் அறிக்கைகள் அதன் செயற்குழுவினாலேயே வெளியிடப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியில் செயற்பட்ட ஜனநாயக இளைஞர் இணையத் தலைவர் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (11) விலகினர். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஜனநாயக இளைஞர் இணையத்தின் இராஜினாமா தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சித் தலைமையின் சில தீர்மானங்கள் காரணமாக தொடர்ந்தும் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளைத் தொடர முடியாது என ஜனநாயக இளைஞர் இணையம் அறிவித்திருந்தது. எனினும், இந்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும் கட்சித் தலைவரின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சிலரால் இந்த விடயம் ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் என குறிப்பிட்டு ஜி. விஷ்ணுகாந்த் என்பவரால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.