குத்துச்சண்டை கோதாவில் இன்று இலங்கைக்கு 2 வெண்கலம்

குத்துச்சண்டை கோதா: 2 வெண்கலப்பதக்கங்களை இன்று சுவீகரித்தது இலங்கை

by Bella Dalima 13-04-2018 | 4:09 PM
21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை கோதாக்களில் 2 வெண்கலப்பதக்கங்களை இலங்கை சுவீகரித்துள்ளது. 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் 9 ஆவது நாளுக்கான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் 46 - 49 கிலோகிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். அரையறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் கலாலா யெபாவுடன் மோதிய திவங்க ரணசிங்க தோல்வியைத் தழுவினார். குத்துச்சண்டை கோதாவில் அரையிறுதியில் தோல்வியடையும் வீரர்களுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படுகின்றது. இதன்பிரகாரம், திவங்க ரணசிங்கவிற்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் இரண்டாவது வெண்கலப்பதக்கத்தை இஷான் பண்டார சுவீகரித்துள்ளார். ஆடவருக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை கோதாவின் அரையிறுதி போட்டியில் இஷான் பண்டார வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். இந்தியாவின் கௌரவ் சொலன்கியுடன் நடைபெற்ற போட்டியில் இஷான் பண்டார தோல்வியைத் தழுவினார். இதன் பிரகாரம், பொதுநலவாய விளையாட்டு விழாவில், குத்துச்சண்டை கோதாக்களில் இதுவரை இலங்கை மூன்று வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1938 ஆம் ஆண்டில் இலங்கை தங்கப்பதக்கமொன்றை வெற்றிகொண்டதுடன், 1950 ஆம் ஆண்டில் 2 வெண்கலப்பதக்கங்கள் சுவீகரிக்கப்பட்டன. அதனையடுத்து, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவிலேயே குத்துச்சண்டை கோதாவில் முதற்தடவையாக பதக்கம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் சம்பத் ரணசிங்க இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஈட்டியெறிதல் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.