இளைஞர் இணைய தலைவரின் குற்றச்சாட்டை மறுத்த செயலாளர்

ஜனநாயக மக்கள் முன்னணியில் விரிசல்: இளைஞர் இணையத் தலைவரின் குற்றச்சாட்டை மறுத்த செயலாளர்

by Bella Dalima 12-04-2018 | 9:12 PM
Colombo (News 1st)  அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியில் விரிசல் ஏற்பட்டுள்ளமை இன்று மீண்டும் உறுதியானது. கட்சித் தலைமையின் சில தீர்மானங்கள் காரணமாக தொடர்ந்தும் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளைத் தொடர முடியாது என ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவர் நேற்று (11) குறிப்பிட்டிருந்தார். எனினும், அந்தக் குற்றச்சாட்டுக்களை ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் இன்று மறுத்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் பிரிவான ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவர் நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதே உத்தியோகப்பூர்வ கடிதத் தலைப்பில் ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் இன்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து, நேற்று தலைவர் கூறிய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மனோ கணேசன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு எவ்வித சேவையையும் ஆற்றவில்லை எனவும் அவர் அமைச்சு அந்தஸ்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதாகவும் ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவர் நேற்று குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, அமைச்சர் மனோ கணேசனை அரசியலில் இருந்து அழிக்கும் அவா கொண்ட சில மாற்று அரசியல் நபர்களுடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வந்த 6 இளைஞர் இணைய அங்கத்தவர்கள் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் ஜி. விஷ்ணுகாந்த் இன்று தெரிவித்துள்ளார். பொய்யான பல குற்றச்சாட்டுக்களை இவர்கள் முன்வைப்பதாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறிய போது, அரசியல் கைதிகளின் தொகை 200 ஆகக் காணப்பட்டதாகவும் அது தற்போது 130 ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கில் காணிகள் தற்போது மீளக் கையளிக்கப்படுவதாகவும் அதற்காக அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களுமே இந்த விவகாரங்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் ஜி. விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.