by Bella Dalima 12-04-2018 | 8:28 PM
Colombo (News 1st)
உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்கள் சிலர் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் இன்றும் தெரிவு செய்யப்பட்டனர்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.
பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தலைவரைத் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆசிர்வாதம் சந்தியாகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வேதநாயகம் மஹிந்தனும் போட்டியிட்டனர்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுவின் உதவியுடன் 15 வாக்குகளைப் பெற்ற ஆசிர்வாதம் சந்தியாகு சபைத் தலைவரானார்.
எதிர்த்து போட்டியிட்ட வேதநாயகம் மஹிந்தன் 6 வாக்குகளைப் பெற்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
எனினும், கடந்த முறை மாந்தை மேற்கு பிரதேச சபையின் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் பிரதித் தலைவராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஹம்மத் தௌபீக் தெரிவானார்.
தம்பலகாமம் பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பு வசமானது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எஸ்.எம். சுபியானும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எம்.இமாமும் போட்டியிட்டனர்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உதவியுடன் 8 வாக்குகளைப் பெற்ற எஸ்.எம். சுபியான் தலைவராகத் தெரிவானார்
எதிர்த்துப்போட்டியிட்ட எம். இமாமுக்கு 7 வாக்குகள் கிடைத்தன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பிரதித் தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்பிக்க பண்டார தெரிவானார்.