போட்டியிட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்

தேர்தலில் போட்டியிட வேண்டுமென பெருவாரியான மக்கள் விரும்புகின்றனர்: சி.வி விக்னேஷ்வரன்

by Bella Dalima 11-04-2018 | 7:50 PM
Colombo (News 1st)  அடுத்த தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பெருவாரியான மக்கள் விரும்புவதைத் தாம் அறிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சிகளின் அனுமதி பெறாதவர்களின் கருத்துக்களைக் கேட்டு கலவரமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறொரு கட்சியூடாக தேர்தலில் தாம் நிற்கக்கூடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு தம்மை சிலர் சாடுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். சிலர் தம்மைத்தாமே கண்ணாடியில் பார்த்து, காரணம் கண்டுபிடிக்காது தம்மைத் திட்டுவதாகவும் வாரத்திற்கொரு கேள்விக்கான பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சியிடமிருந்து தமக்கு அழைப்பு வருவதற்கான சாத்தியமில்லை எனவும் மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறொரு கட்சியூடாக தேர்தலில் நிற்க முடியும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால், கடந்த கால அனுபவங்களின்படியும் நடைமுறை ரீதியாகவும் அதில் இடையூறுகள் ஏற்பட வாய்புள்ளமையையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய கட்சி தொடங்குமாறு பலர் ஆலோசனை வழங்குவதாகவும், கொள்கை ரீதியாக உடன்படுவோருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என கூறப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான காலம் கனிந்துவிட்டதா என்பதைத் தாம் அறியவில்லை எனவும் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ''இணைந்த வடக்கு - கிழக்கில் சுயநிர்ணய உரிமை'' எனும் அரசியல் வினைப்பாட்டை சர்வதேச சமூகம், மத்திய அரசு மற்றும் மக்கள் மத்தியில் தாம் மீள நிலைநிறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். வட கிழக்குத் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் எனும் தமிழ் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை முதலமைச்சர் ஞாபகப்படுத்தியுள்ளார். அந்த கொள்கைக்காகவே கடந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்குக் கேட்டதாகவும் மக்கள் அமோக வெற்றியைத்தந்து தம்மை முதலமைச்சராக்கியமையையும் முதலமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார். எனினும், அதே கொள்கையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா என சி.வி விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது அதில் எத்தனை ஸ்தாபகக் கட்சிகள் உள்ளன எனவும், அவ்வாறானதொரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து அழைப்பு வரும் எனவும் முதலமைச்சர் வினவியுள்ளார். அடுத்த தேர்தலில் சி.வி விக்னேஷ்வரன் கூட்டமைப்பு சார்பில் களமிறக்கப்பட மாட்டார் எனும் சுமந்திரனின் கருத்திற்கும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். தம்மேலுள்ள பாசத்தினால், தம்மைக் கஷ்டப்படுத்தக்கூடாது எனும் மனோநிலையில், தமது மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளதாக சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டில், தேர்தலில் போட்டியிடுவதற்கு மறுத்த போது பல மாற்று யோசனைகள் கூறி தாம் சமாதானப்படுத்தப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களின் பின்னர் இன்னுமொருவர் ஏற்றுக்கொள்வார் என சிலர் கூறியதாகவும், ஒரு இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற பின்னர் அதுபற்றி பேசப்படவில்லை எனவும் முதலமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முடுக்கிவிடப்பட்ட இயந்திரப் பொம்மைகள், முடுக்கியவர் முன்மொழிவுக்கேற்ப சபையில் கூத்தாடியபோது, இவ்விடயம் முதலில் பேசப்பட்டதாக வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியிலிருந்த சர்வாதிகாரப்போக்கு அப்போது வெளிவந்ததாக சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்ததாகவும் வடக்கு முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்.