அல்ஜீரிய இராணுவ விமான விபத்து: 257 பேர் பலி

அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் பலி

by Bella Dalima 11-04-2018 | 8:33 PM
அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியாவின் விமானப் படைக்கு சொந்தமான Ilyushin II-76 எனும் விமானம் Boufarik விமானப்படைத் தளத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் 257 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் 10 பேர் விமானத்தின் ஊழியர்கள் என அல்ஜீரியாவின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேற்கு சஹரா பிரதேசத்தின் தனி இராச்சியத்திற்காகப் போராடி வரும் பொலிசாரியோ என்ற அமைப்பினைச் சேர்ந்த 26 பேரும் இவர்களில் அடங்குவதாக அல்ஜீரியாவின் ஆளும் கட்சியை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேற்கு சஹரா தமது நிர்வாகத்திற்கு சொந்தமானது என மொராக்கோ தெரிவித்து வரும் நிலையில், தனி நிர்வாகம் கோரி போராடும் குழுவுக்கு அல்ஜீரியா ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமானம் மொராக்கோ எல்லைக்கு அருகிலுள்ள மேற்கு அல்ஜீரியாவின் பெஷார் நோக்கி பறந்துகொண்டிருந்த போதே விபத்திற்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் விமானப்படை உறுப்பினர்களும் யுத்த உபகரணங்களும் இருந்ததாக தகவல் பதிவாகியுள்ளது.