வெலிக்கடை மோதல்:  இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை மோதல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

by Bella Dalima 10-04-2018 | 5:09 PM
Colombo (News 1st)  வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவு பொறுப்பதிகாரி நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 24 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணையை ஆரம்பித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.