மேரிகோமுடன் மோதுகிறார் அனுஷா

பொதுநலவாய விளையாட்டு விழா: நாளை மேரிகோமுடன் மோதுகிறார் இலங்கையின் அனுஷா

by Bella Dalima 10-04-2018 | 8:42 PM
21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான இன்று இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆடவருக்கான நீளம் பாய்தலில் ஜனக விமலசிறி 7.84 மீட்டர் தூரத்திற்குப் பாய்ந்து ஆற்றலை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ருமேஷிகா ரத்நாயக்க முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியை 23.43 செக்கன்ட்களில் கடந்தார். இதன் மூலம் அவர் நாளை (11) நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். குத்துச்சண்டை கோதாவில் ஆடவருக்கான 46 முதல் 49 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் திவங்க ரணசிங்க அரை இறுதியை உறுதி செய்தார். இதற்கமைய அவருக்கு பதக்கமொன்று கிடைப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், இலங்கைக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளதுடன் திவங்க ரணசிங்கவும், அனுஷா கொடிதுவக்கும் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மகளிருக்கான 45 முதல் 48 கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் போட்டியிடும் அனுஷா கொடிதுவக்கு அரை இறுதியில் மோதவுள்ளார். பொதுநலவாய விளையாட்டு விழாவில் 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை கோதாவில் இலங்கைக்கு இந்த முறை பதக்கம் கிட்டியுள்ளது. அனுஷா கொடிதுவக்கு இலங்கை நேரப்படி நாளை காலை 7.30 அளவில் இந்தியாவின் மேரி கோமுடன் அரை இறுதிக் கோதாவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இவர்கள் இருவரும் 2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு விழாவில் 48 முதல் 51 கிலோ கிராம் எடைக்குட்பட்ட குத்துச்சண்டை கோதாவில் தங்கப் பதக்கத்திற்காக மோதியதுடன் அதில் காலில் ஏற்பட்ட உபாதையால் அனுஷாவுக்கு தோல்வியடைய நேரிட்டது. இலங்கை ஒரு வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களுடன் 3 பதக்கங்களை வென்றுள்ளதுடன், இந்த 3 பதக்கங்களுமே பளு தூக்கலில் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.