தட்டிப்பறிக்கப்படும் தண்ணீருக்கான உரிமை

தட்டிப்பறிக்கப்படும் தமிழகத்தின் தண்ணீருக்கான உரிமை

by Bella Dalima 10-04-2018 | 9:20 PM
காவிரி நீர்ப்பிரச்சினையால் இன்று சர்வதேசத்தின் ஒட்டுமொத்த கவனமும் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. சென்னை தொடக்கம் இராமநாதபுரம் வரை திருப்பூரிலிருந்து வேலூர் வரை ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையும் தமிழகத்தின் 15 மாவட்டங்களின் குடிநீருக்கான முழுமையான ஆதாரம் காவிரி. இதைத்தவிர மேலும் 11 மாவட்டங்களில் விவசாயத்திற்கான மூலாதாரமாகவும் குடிநீர்த் தேவைக்காகவும் காவிரி நீரே பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டிற்கான உணவுத்தேவையில் 60 சதவீதத்திற்கு மேல் நெல் உற்பத்தி செய்யப்படுவதற்கு காவிரியே மூல காரணம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காவிரி நீரின் மீதான தமிழகத்தின் உரிமை கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக இழக்கப்பட்டுள்ளது. நதி உற்பத்தியாகிற மேல்பகுதி அந்த நதிநீரைப் பயன்படுத்துகிற கீழ் பகுதிக்கு காலங்காலமாக இருக்கிற தண்ணீர் உரிமையைத் தட்டிப் பறிக்க முடியாது என்பதும் அவர்கள் பாதிப்படைகிற வகையில் எதையும் செய்யக்கூடாது என்பதும் உலகம் ஒப்புக்கொண்ட அடிப்படை நதி நீர் பங்கீட்டுத் தர்மம். ஆனால், அதையெல்லாம் எள்ளளவிலேனும் கருத்திற்கொள்ளாமல் சிலர் காவிரி விவகாரத்தில் செயற்படுவதால் தான் காவிரிப்பிரச்சினை வலுப்பெற்றுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க தமிழகத்தில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை, இன்றைய தினம் திரையுலகத்தினர் IPL போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மறுபுறம், இன்று நெய்வேலியில் அமைந்துள்ள மத்திய அரசின் நிறுவனத்தை பெருமளவிலான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து பொலிஸாரின் தடையையும் மீறி முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, இன்று மதியமளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட பெருமளவிலானவர்கள், அங்கு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். IPL போட்டியை தடை செய்யக்கோரி சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டும் போட்டு தமது எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலரை பொலிஸார் கைது செய்தனர்.