கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தலைவர் கைது

கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தலைவரும் உறுப்பினரும் கைது

by Bella Dalima 10-04-2018 | 9:47 PM
Colombo (News 1st)  மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் தலைவரும் உறுப்பினரொருவரும் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான இருவரும், தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சபைக்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், போனஸ் ஆசனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட தி.மு. சந்திரபாலவிற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு. சந்திரபால சபைக்குள் பிரவேசிப்பதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பொலிஸாரின் தலையீட்டில் அவர் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டார். இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஞா.உதயராசாவும் அவரது சகோதரரான ஞா.அமலதாஸூம் பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டனர். அமைதியற்ற முறையில் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர், சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதுடன் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சி.கோணலிங்கமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் க.கணேஷனும் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டனர். சிவஞானம் கோணலிங்கம் 10 வாக்குகளைப் பெற்றதுடன், கண்ணப்பன் கணேஷன் 8 வாக்குகளைப் பெற்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூவரில் இருவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் வாக்களித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தி.மு.சந்திரபால உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தலா ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூன்று ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன தலா இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றின. அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்று தலைவராகத் தெரிவான சி.கோணலிங்கமும் உறுப்பினரான தெ.சத்தியநாதனும் சபையிலிருந்து வெளியே வந்தபோது கைதாகினர். வாகரை - கதிரவெளி பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மூதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவரே இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 32 வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியமையை பெஃப்ரல் அமைப்பு வெளிக்கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது.