எரிபொருளுக்கான செலவு அதிகரித்து செல்கிறது

எரிபொருளுக்கான அரசாங்கத்தின் செலவு அதிகரித்து செல்கிறது

by Bella Dalima 10-04-2018 | 7:06 PM
Colombo (News 1st)  எரிபொருள் இறக்குமதிக்கான அரசாங்கத்தின் செலவு துரிதமாக அதிரகரித்த வண்ணமுள்ளது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய்க்கான செலவு 147 வீதத்தையும் விட அதிகம் என மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன், எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், எரிபொருட்களின் விலை உலக சந்தையில் குறைவாகக் காணப்பட்டமையே இதற்கு காரணமாகும். எனினும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடையும் சாத்தியம் தென்படுகின்றது. இந்த பின்புலத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி முதல் ஒரு லிட்டர் டீசலின் விலையை 5 ரூபாவிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 9 ரூபாவிலும் உயர்த்துவதற்கு லங்கா - இந்தியன் ஒயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. நாளாந்தம் 33 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கிய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது எரிபொருளை விநியோகித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியம் கடந்த ஓகஸ்ட் மாதம் வௌியிட்ட அறிக்கையின் ஊடாக எரிபொருளுக்கான விலைச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்துவதற்கு இந்த வருடம் மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தன்னிச்சையாக விலையைத் தீர்மானிக்கும் சுட்டெண்ணை தயாரிப்பதன் தேவையை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவான கடன் வசதிகளுக்கான இரண்டாம் தவணையை விடுவிப்பதற்கு முன்னர் வௌியிட்ட மீளாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த விலைச்சுட்டெண் தாமதம் அடைவதால் தொடர்ந்தும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்நோக்குவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் பேச்சுவார்த்தையின் போது இந்த விலைச்சுட்டெண் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன, டெய்லி FT பத்திரிகைக்கு இன்று குறிப்பிட்டிருந்தார். வாஷிங்டன் நகரில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. பெட்ரோலிய அபிவிருத்தி அமைச்சும் நிதி அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விலைச்சுட்டெண்ணை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளரை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டின் உற்பத்தி வருமான மார்க்கம் அதிகரிக்காவிடின் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படாது. அவ்வாறாயின் அதனை பாரிய பிரச்சினையாக மீண்டும் தாம் எச்சரிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.