வடமாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர்வேட்பாளர் யார்?

வடமாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?

by Staff Writer 09-04-2018 | 8:41 PM
COLOMBO (News 1st) உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி 2006 ஆம் ஆண்டில், இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகம், இருவேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டன. இதனையடுத்து, பல காலமாக பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த வட மாகாண சபைக்கான தேர்தல், 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. மாகாண சபையின் ஆட்சி அமைக்கப்பட்டு நான்கரை வருடங்கள் கடந்த நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில், சி.வி விக்னேஸ்வரன், தமது வேட்பாளராக களமிறக்கப்பட மாட்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் அறிவித்தார். திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடமும் வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர். வடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதன்போது அவருக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டனர். முதலாவது வட மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.youtube.com/watch?v=njJsg66Cajg