by Staff Writer 09-04-2018 | 8:54 PM
COLOMBO (News 1st) சுமார் 40 வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்தித்த முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்ற தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனகையா தவராசா
16 வாக்குகளையும், சுயேட்சைக்குழுவின் ஜோசப் அமலதாஸ் மூன்று வாக்குகளையும் பெற்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தன.
கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் உப தலைவராக, திருச்செல்வம் ரவீந்திரன் தெரிவானார்.
தேர்தல் முடிவின்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி, சுயேட்சைக்குழு ஆகியன தலா 3 ஆசனங்களையும் கைப்பற்றின.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன தலா இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றின.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் நடைபெற்றன.
இந்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல், 1970 ஆம் ஆண்டில் இறுதியாக நடத்தப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதலாவது அமர்வு கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்றதுடன், அதன் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எஸ்.பிரேமகாந்த் தெரிவு செய்யப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=eWRtbTO93FQ