யாழில் படையினர் வசமுள்ள காணியை விடுவிக்க நடவடிக்கை

யாழில் படையினர் வசமுள்ள 683 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை

by Staff Writer 08-04-2018 | 8:30 PM
COLOMBO  (News 1st) - யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள 683 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள மேலும் 683 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட வலிகாமம் வடக்கில் இந்த காணிகள் அமைந்துள்ளன. எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் இந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை , மயிலிட்டி, தையிட்டி கிழக்கு மற்றும் மயிலிட்டி வடக்கு ஆகிய பகுதிகளிலுள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு. புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இது மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை மேற்கோள்காட்டி சன்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மக்களின் தேவைகளை கருத்திற்கு கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பாதுகாப்பு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பருத்தித்துறை மயிலிட்டி ஊடாக பொன்னாலை வீதி, பொது மக்களின் பாயன்பாட்டிற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் முதல் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த வீதி திறக்கப்பட்டிருக்கும் என மீள் குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்திருந்த இராணுவ பாதுகாப்பு அரண் ஒன்று அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது குறித்த பாதுகாப்பு அரண் தொடர்ந்து அப்பிரதேசத்திற்கு தேவையில்லை எனக் கருதி பிரிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=tOoP_bBVTvg