சல்மான் கான் பிணையில் விடுதலை

மான் வேட்டை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கான் பிணையில் விடுதலை

by Bella Dalima 07-04-2018 | 5:42 PM
மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது. அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உட்பட 5 பேர் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் (05) தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சல்மான் கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவரை பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமர்வு நீதிமன்றம், பிணை மனு மீதான விசாரணை மற்றும் உத்தரவை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று சல்மான் கானுக்கு பிணை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.