அரசாங்கத்திலிருந்து விலகத்தயார்: 16 பேர் அறிவிப்பு

பதவிகளிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விலகத்தயார்: இணக்க அரசாங்கத்திலுள்ள 16 பேர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

by Bella Dalima 07-04-2018 | 8:20 PM
Colombo (News 1st)  பதவிகளில் இருந்தும் அரசாங்கத்தில் இருந்தும் விலகத் தயார் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இணக்க அரசாங்கத்திலுள்ள 16 பேர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். எனினும், இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்திலுள்ள 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிக்கவில்லை. எவ்வாறாயினும், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்ற பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் 21 பேரின் கையொப்பங்களுடன், பிரதமருக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கையளிக்கப்பட்டது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 15 பேருக்கும், பிரதி சபாநாயகருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், அதனை மீளப்பெறுவதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியதாக பின்னர் பதிவாகியது. இவ்வாறான பிரேரணையொன்று சமர்ப்பிக்க முன்னர், கட்சியின் பாராளுமன்றக் குழுவினர் கலந்துரையாட வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு கலந்துரையாடப்படவில்லை என பிரதமர் தெரிவித்ததாக நேற்று மாலை வௌியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தமக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களின் நிலைப்பாடாகும். எதிர்வரும் திங்கட்கிழமை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளதுடன், தற்போதைய நிலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளது.