தலைவர்களை தெரிவு செய்யாத ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 

மூன்று சபைகளுக்கான தலைவர்களை இதுவரை தெரிவு செய்யாத ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

by Bella Dalima 07-04-2018 | 4:23 PM
Colombo (News 1st)  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இதுவரை 3 சபைகளுக்கான தலைவர்களை தெரிவு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பலப்பிட்டிய, பெந்தோட்டை மற்றும் ஆணமடுவ ஆகிய பிரதேச சபைகளுக்கான தவிசாளர்கள் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பெரும்பான்மையை உறுதிப்படுத்தியுள்ளதால், தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கு மீண்டுமொரு வாக்கெடுப்பு அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் கட்சியின் செயலாளருக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேச சபைகளுக்கான தவிசாளர்கள் இதுவரை தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் என்னவென ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசமிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. இன்றைய தினத்திற்குள் தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி சட்டத்திற்கு அமைய, பிரதேச சபைகளின் தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்படுமாயின், தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்ற கட்சியின் வேட்பாளரை, தவிசாளராக நியமிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.