by Bella Dalima 06-04-2018 | 7:16 PM
மலேசிய பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டொலர்களை முறைகேடாக தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி விட்டதாக பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வருகிறார்.
பிரதமர் நஜிப் ரசாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.
முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார்.
தற்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்துள்ளார்.
இந்நிலையில், மலேசிய பாராளுமன்றத்திற்கு இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் தண்டனை அனுபவித்துவரும் அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள அவரை பிரதமர் பதவியில் அமரவைக்க எதிர்க்கட்சிகள் கூட்டணி முயற்சித்து வருகிறது.
எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் தொகுதிகளின் எல்லைப்பகுதி சீரமைப்பு ஆகியவற்றால் ஆளும் கட்சி கூட்டணியின் வாக்கு வங்கி சற்றே குறையலாம்.
எனினும், நஜிப் ரசாக்கை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை ஆளும் கட்சி மீண்டும் கைப்பற்றும் என்று மலேசிய ஊடகங்கள் கருதுகின்றன.
இந்நிலையில், மலேசிய பாராளுமன்றத்தை நாளை கலைக்குமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்னும் 60 நாட்களுக்குள் அங்கு பாராளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.