அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது: இரா.சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது: இரா.சம்பந்தன்

by Bella Dalima 06-04-2018 | 5:23 PM
Colombo (News 1st)  தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களைத் தௌிவுபடுத்தியுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று (05) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது, அரசியல் கைதிகள், அதிகாரப்பகிர்வு, காணி விடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் பலர் விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஐரோப்பிய குழுவினரிடம் எடுத்துரைத்துள்ளார். அவர்கள் அனைவரும் தாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மேலும், நீதி பொறிமுறைகள், இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் செயற்பாடு மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் காணப்படும் இழுத்தடிப்புகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை வௌியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேசத்தின் ஆதரவானது நிபந்தனைக்கு உட்பட்டது என்பதை சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.