மஹிந்தானந்த அளுத்கமகேயின் ரிட் மனு நிராகரிப்பு

கைதாவதைத் தடுக்குமாறு கோரி மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிப்பு

by Bella Dalima 06-04-2018 | 4:40 PM
Colombo (News 1st)  பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எவ்வித சட்ட அடிப்படையுமற்றது என அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பீ.பத்மசூரசேன மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகளால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போது கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, இலங்கை குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸார் அல்லது விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு விநியோகிப்பதற்காக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட 5 கோடி ரூபா பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அமைய, தம்மை கைது செய்வதற்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏனைய செய்திகள்