MTV,MBC தலைமையகத்திற்கு முன்பாக விஷமிகள் குழப்பம்

MTV,MBC தலைமை அலுவலகத்திற்கு முன்பாக விஷமிகள் குழப்பம்

by Staff Writer 05-04-2018 | 10:37 AM
COLOMBO (News 1st) - பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்களிப்பு நிறைவுபெற்று ஒரு சில நிமிடங்களின் பின்னர், கொழும்பு பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எம்.டி.வி - எம்.பி.சி. ஊடக வலையமைப்பின் தலைமையகத்தை சுற்றிவளைத்த குழுவினர் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட நேரம், நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் அலுவலகத்தில் இருந்து வெளியேற முடியாத இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கினர். அமைதியின்மையை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்த குழுவினர் எம்.டி.வி - எம்.பி.சி. ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, வெடிச்சம்பவங்களை ஏற்படுத்தி ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக சஞ்சரித்தனர். பச்சை நிற கொடிகளை கைகளில் ஏந்தியவாறே நேற்றிரவு இந்தக் குழுவினர் வருகைத் தந்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ அமைதியின்மையை ஏற்படுத்திய குழுவினரை வழிநடத்துவதை அவதானிக்க முடிந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அருகில் குறித்த குழுவினர் ஒன்று கூடி திட்டமிட்டதன் பின்னரே எம்.டி.வி - எம்.பி.சி தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்து குழப்பம் விளைவித்தனர். ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அமைதியின்மையை ஏற்படுத்திய இந்த குழுவினர் பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து கலைந்து சென்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரே கொண்டு வந்திருந்தனர். ஆகவே நீங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு முன்பாகவே சென்றிருக்க வேண்டும் என்பதை நாம் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸவிற்கு நினைவூட்டுகின்றோம்.