ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் கண்டனம்

MTV/MBC தலைமையகம் முன்பான குழப்பம் விளைவிக்கப்பட்டமைக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் கண்டனம்

by Bella Dalima 05-04-2018 | 10:37 PM
  MTV/MBC ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நேற்றிரவு குழப்பம் விளைவித்து, தாக்குதல் மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியை ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வன்மையாகக் கண்டித்துள்ளது. MTV/MBC ஊடக வலையமைப்பை இலக்கு வைத்து குழப்பம் விளைவித்து தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவத்தை ஊடக அமைப்பு என்ற வகையில் ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், இதுபோன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் தெரிவித்துள்ளது.