கித்சிறி ராஜபக்ஸ யார்?

MTV/MBC தலைமையகம் முன்பாக அமைதியற்ற முறையில் செயற்பட்டவர்களை வழிநடத்திய கித்சிறி ராஜபக்ஸ யார்?

by Bella Dalima 05-04-2018 | 7:50 PM
Colombo (News 1st) MTV/MBC தலைமையகத்திற்கு முன்பாக அமைதியற்ற முறையில் செயற்பட்ட குழுவினரை வழிநடத்திய மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ என்பவர் யார்? கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ MTV/MBC தலைமையகத்திற்கு முன்பாக அமைதியற்ற முறையில் செயற்பட்ட பின்னர், கங்காராம விகாரையில் பிரதமருடன் சேர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டார். அவர் கங்காராம விகாரையில் பிரதமருக்கு அருகில் இருக்கும் காட்சிகளை அரச ஊடகமும் ஒளிபரப்பியிருந்தது. கித்சிறி ராஜபக்ஸ பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்து கொழும்பு மாநகரின் பல இடங்களில் பதாதைகளைக் காட்சிப்படுத்தியிருந்தார். திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கித்சிறி ராஜபக்ஸ பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஊடகங்களுக்கு முன்பாக அமைதியற்ற முறையில் செயற்பட்டு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கு இவ்வாறானவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா? நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது காணப்பட்ட கொலன்னாவை நகர சபையின் உப தலைவர் அநுர லியனகே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரின் அரசியல் நண்பராவார். MTV/MBC தலைமையக வீதியைக் கடந்து சென்ற அவரும் பிரதமருடன் கங்காராம விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.