பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு 2 பதக்கங்கள்

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

by Bella Dalima 05-04-2018 | 8:48 PM
Colombo (News 1st)  21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று இலங்கை இரண்டு பதக்கங்களை சுவீகரித்துள்ளது. பளு தூக்கல் போட்டிகளில் ஆடவர் பிரிவில் சத்துரங்க லக்மாலும், மகளிர் பிரிவில் தினுஷா கோமஸூம் வெண்கலப்பதக்கங்களை வென்றனர். 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் நேற்று (04) ஆரம்பமானது. போட்டிகளின் முதல் நாளான இன்று பளு தூக்கலில் 56 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட சத்துரங்க லக்மால், 248 கிலோகிராம் எடையைத் தூக்கினார். ஸ்னெச் முறையில் 114 கிலோகிராமும், க்ளீன் அன்ட் ஜேர்க் முறையில் 134 கிலோகிராமும் அடங்கலாக மொத்தம் 248 கிலோகிராம் எடையை அவர் தூக்கினார். மகளிருக்கான 48 கிலோகிராம் எடைப்பிரிவில் தினுஷா கோமஸ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராமும், க்ளீன் அன்ட் ஜேர்க் முறையில் 85 கிலோகிராமும் அடங்கலாக மொத்தம் 155 கிலோகிராம் எடையை அவர் தூக்கினார்.