பிரதமருக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காலக்கெடு

பிரதமருக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறுதிக் காலக்கெடு

by Bella Dalima 03-04-2018 | 8:16 PM
Colombo (News 1st)  இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒரு மணித்தியாலத்திற்கும் முன்பதாகவே முடிவுக்கு வந்தது. நேற்றிரவு கட்சி எடுத்த ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய, இராஜினாமா செய்யுமாறு பிரதமருக்கு அறிவித்ததாக அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறினர். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமாவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் வௌியாகவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதுடன், நிறைவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதமருக்கு அறிவித்துள்ளார். பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை அமைச்சர் சிறிபால டி சில்வா பிரதமருக்கு அறிவித்ததாகவும் பிரதமருக்கு அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வௌியேறியதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காது சென்றனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் தமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரின் கருத்துக்களை வினவுவதற்கு ஊடகவியலாளர்கள் முயற்சித்தபோதும் அது பயலனளிக்கவில்லை.