த.தே.கூ, மு.கா இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை

by Bella Dalima 03-04-2018 | 8:44 PM
Colombo (News 1st)  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானமொன்றை இதுவரையில் எடுக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியை இன்று சந்தித்திருந்தார். அவருடன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து, பிரேரணை தொடர்பான தீர்மானத்தை தமது குழுவினருடனான கலந்துரையாடலின் போது எடுக்க முடியும் என இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று காலை சந்தித்த போது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வருகை தரவில்லை. இன்று முற்பகல் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் பாராளுமன்ற கட்டடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் இன்று மாலை கூடியபோது எம்.ஏ.சுமந்திரனைக் காணக்கூடியதாக இருந்தது. எவ்வாறாயினும், எவ்விதத் தீர்மானமும் இன்றி இந்த கலந்துரையாடல் நிறைவுபெற்றது. இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல் தற்போது கட்சி தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.