தமிழகமெங்கும் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்

by Bella Dalima 03-04-2018 | 3:43 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழகமெங்கும் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வணிகர் சங்க பேரமைப்பில் அங்கம் வகிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மருந்து மற்றும் மருந்து வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.