24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: முதலாம் எதிரி சார்பாக சட்டமா அதிபர் ஆஜராக முடியும் என அறிவிப்பு

24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: முதலாம் எதிரி சார்பாக சட்டமா அதிபர் ஆஜராக முடியும் என அறிவிப்பு

24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: முதலாம் எதிரி சார்பாக சட்டமா அதிபர் ஆஜராக முடியும் என அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2018 | 7:15 pm

COLOMBO (News 1st) – யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் 1996 ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில், முதலாம் எதிரி சார்பாக சட்டமா அதிபர் ஆஜராக முடியும் என யாழ்.மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த லெப்டிணன் கேர்ணல், துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்த 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் , அவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களது உறவினர்கள், ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களில் ஒன்பது மனுக்கள் தொடர்பான விசாரணை ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில் ஏனைய 3 மனுக்களை யாழ்.மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணையில் முதலாம் எதிரியான அப்போதைய நாவற்குழி இராணுவ முகாம் தளபதி லெப்டினன் கேர்ணல் துமிந்த கெப்பிட்டிவெலான சார்பாக சட்டமா அதிபர் முன்னிலையாக முடியாது என மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது இராணுவ லெப்டினல் கேணல் துமிந்த கெப்பிட்டிவெலான மற்றும் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சார்பில், சட்டமா அதிபர் சார்பில் தாம் ஆஜராவதாக பிரதி சொலிஸ்ட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்திருந்த நிலையில் மன்று அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியான இராணுவ கட்டளை அதிகாரி அரச உத்தியோகத்தர் என்பதால் அவர் சார்பாக முன்னிலையாக வேண்டிய கடப்பாடு சட்ட மா அதிபருக்கு உண்டு என தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த மனு தொடர்பான அரச தரப்பு ஆட்சேபனைக்காக எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்