சீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது

சீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது

by Staff Writer 02-04-2018 | 5:27 PM
COLOMBO (News 1st) - கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன. ஐரோப்பிய விண்வௌி மையம் கணிப்பிற்கு அமைய பீஜிங் நேரப்படி காலை 08.15 க்கு பூமியில் வீழ்ந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் பூமியை அடையும் முன்னரே எரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிதைவுகள், நியூஸிலாந்து , அமெரிக்காவிற்கு இடையிலான கடற்பரப்பில் விழும் சாத்தியமுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மனிதர்களை கொண்ட விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவும் சீனாவின் இலட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியான தியன்கொங்-1 விண்கலம், 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட குறித்த விண்வெளி நிலையம், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தனது பணிகளை முடித்துக்கொண்டது. தியன்கொங்-1 விண்கலம் தங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அதனை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாது எனவும் சீனா 2016 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது.