நாளை முதல் புதிய வரித்திருத்தங்கள் அமுல்

நாளை முதல் புதிய வரித்திருத்தங்கள் அமுல்: அரச, தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் வரியிலும் திருத்தம்

by Bella Dalima 31-03-2018 | 5:13 PM
Colombo (News 1st) புதிய வரித்திருத்தங்கள் நாளை (01) முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் வரி, நாளை முதல் திருத்தப்படவுள்ளது. 7 இலட்சம் வருடாந்த சம்பளம் பெறும் ஒருவரிடம் இதுவரை வரி அறவிடப்பட்டது. புதிய வரி திருத்தத்தின் பிரகாரம், வருடாந்த சம்பளம் 12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12 இலட்சத்திலிருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு 6 இலட்சத்திற்கும் 4 வீத வரி செலுத்தப்பட வேண்டும். இதேவேளை, வௌிநாட்டில் தொழில்புரியும் இலங்கை பணியாளர்கள் வங்கிகளில் வைப்பிலிடும் சேமிப்புப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டிக்கு 5 வீத வரி அறவிடப்படவுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான வருமானத்தில் 15 இலட்சத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. வௌிநாட்டில் தொழில்புரியும் பணியாளர்கள் அங்கிருந்து தமது உறவினர்களுக்கு அனுப்பும் பணத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்து.