தலை துண்டிக்கப்பட்ட பின்னும் உயிருடன் இருந்த கோழி

தலை துண்டிக்கப்பட்ட பின்னும் 18 மாதங்கள் உயிருடன் இருந்த கோழி: Headless Chicken விழாவின் பின்னணி

by Bella Dalima 31-03-2018 | 6:19 PM
அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கோழி ஒன்று 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொலராடோவில் Headless Chicken என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூன் மாதத் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலராடோவில் உள்ள ப்ரூடா நகரில் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணம் 'மைக்' என்ற கோழியாகும். அதிசய மைக் என பெயரிடப்பட்ட இந்தக் கோழி, தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. ஒரு நாள் மைக்கின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையைத் துண்டித்துள்ளார். ஆனால், மைக் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் உயிருடன் இருந்துள்ளது. இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். கோழியின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப்படாமல் இருந்ததால் கோழி உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கோழிக்கு உணவானது சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ்ச் மூலம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 18 மாதங்கள் மைக் உயிரோடு இருந்தது. ஆனால், 18 மாதங்களுக்குப் பிறகு உணவுக்குழலில் உணவு சிக்கி மைக் உயிரிழந்தது. மைக்கை நினைவுகூரும் வகையில், Headless Chicken விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மையில் தாய்லாந்திலும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தது. தலை துண்டிக்கப்பட்ட கோழியொன்று ஒரு வாரத்திற்கும் மேலாக உயிருடன் இருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.