தொழிலாளியை குளிர்சாதனப்பெட்டியில் அடைத்த நிர்வாகம்

அக்கரப்பத்தனையில் தோட்டத்தொழிலாளியை குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்த நிர்வாகத்தினர்: மக்கள் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 30-03-2018 | 8:28 PM
Colombo (News 1st)  அக்கரப்பத்தனை - மன்றாசி நியுபொட்மோர் தோட்டத்தில் தொழிலாளர் ஒருவரை களியாட்ட நிகழ்வின் போது குளிர்சாதனப்பெட்டிக்குள் அடைத்து வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்றாசி நகருக்கு அண்மையில் நேற்றிரவு தோட்ட நிர்வாகத்தினருக்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்விற்கு உதவி புரியச்சென்ற இரண்டு தொழிலாளர்களில் ஒருவரை குளிர்சாதனப்பெட்டியில் அடைத்து வைத்ததுடன், பின்னர் அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, நுவரெலியா - அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத்தொழிலாளர் ஒருவரை வேலையில் இருந்து நிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளி, கொழுந்து நிறுவை செய்யும் இடத்திற்கு முன்பாக இன்று தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தமையால், தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கான சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை எனவும், தோட்ட நிர்வாகம் பக்கசார்பாக செயற்படுவதாகவும் தொழிலாளர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் தோட்ட முகாமையாளரைத் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவினர். எதிர்வரும் திங்கட்கிழமை (02) டொரிங்டன் தோட்ட மக்களுடன் கலந்துரையாடி, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக முகாமையாளர் வாக்குறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.